மட்டு. மாநகரம் இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையவில்லை - இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் சுதர்சன்.

எமது மட்டு. மாநகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் உள்ளூராட்சித் தேர்தலில் மாநகர சபையின் அதிகாரங்களை எமது வட்டார மக்கள் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு வழங்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் 11ஆம் வட்டார பெரிய உப்போடை, சின்ன உப்போடை, சீலாமுனை வட்டார வேட்பாளர் த.நடராசா சுதர்சன் தெரிவித்தார்.

சீலாமுனை பகுதியில் இன்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கிராமங்களையும், நகரங்களையும் சிறந்த திட்டங்களுடன் அபிவிருத்தி செய்வதுடன், மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை பெற்றுக்கொடுப்பதே எனதும், எமது கட்சியினதும் இலக்காகும்.

ஊழல், இலஞ்சம், வீண்விரயம், அதிகார துஷ்பிரயோகமின்றி தூய்மையானதும், நேர்மையானதுமான அரசியல் பணிகளை மேற்கொள்ளவதையே எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் நான் செய்வேன் என்பதை மிக ஆணித்தரமாக எமது மக்களுக்கு செல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மட்டக்களப்பு மாநகர சபை பகுதியை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது. எமது மாநகரம் இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையவில்லை. இதனை முழுமையடையச் செய்வதாக இருந்தால் எமது கட்சியின் கையில் ஆட்சி அதிகாரம் வரவேண்டும் என்பதை நாம் புரிந்து கொண்டு வேறு யாருக்கும் இடமளிக்ககாமல் எமது கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இம்முறைத் தேர்தலிலும் எமது மாநகர சபையை  இலங்கை தமிழ் அரசு கட்சி கைப்பற்றும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த வெற்றி ஒரு சாதாரண வெற்றியன்றி வரலாறு காணாத வெற்றியாக அமையவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஓரணியின் கீழ் திரளவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.



Powered by Blogger.