வானில் பறந்த வாக்குப்பெட்டி - மட்டக்களப்பில் நடந்தது என்ன?

2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால்  பட்டத் திருவிழா (15) செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது. 



இப் போட்டியில் தனியாகவும் குழுவாகவும் போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப் போட்டியானது மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் தலைமையில் இடம்பெற்றது. 

இப்  போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார். போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசில்கள்  அரசாங்க அதிபரின் கரங்களால் வழங்கி வைக்கப்பட்டன. 

முதலாம் இடத்தினைப் பெற்று மட்டக்களப்பு களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த கலாரூபன் குழுவினர் 100,000/= ரூபாய் பணப்பரிசினை பெற்றுக் கொண்டதோடு, இரண்டாம் இடத்தினைப் பெற்று  மட்டக்களப்பு கலாசார பண்பாட்டுத் திணைக்களத்தைச் சேர்ந்த எஸ்.ரூபேசன்  மற்றும் அவரது  குழுவினர் 50,000/=   ரூபா பணப்பரிசை  பெற்றுக் கொண்டனர். 

மூன்றாம் இடத்தினைப் பெற்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.குலேந்திரன் மற்றும் ரகு குழுவினர்  25,000/= ரூபா பணப்பரிசை  பெற்றுக்கொண்டனர். 

இப் போட்டி ஆனது புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் எமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலமைந்த கருப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு  சுயாதீன நடுவர்களினால்  தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இப் பட்டத் திருவிழாவினை காண அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், 20 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் தமது பட்டங்களை போட்டியில் இணைத்துக்கொள்வதற்காக ஆர்வர் காட்டியதுடன், மட்டக்களப்பு தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தினால் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட வாக்குப் பெட்டி வடிவிலான அழகிய பட்டம் ஒன்று வானில் பறக்கவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






















Powered by Blogger.