மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்திற்கான இணைப்பாளர்களை தெரிவு செய்யும் விசேட கூட்டம் மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் செயற்பாடுகளை மாவட்டம் முழுவதும் இலகுவாக விஸ்தரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பிரதேச செயலக ரீதியாக இணைப்பாளர்களை தெரிவு செய்யும்  விசேட கூட்டம் 29.03.2025 திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் புதிய நிர்வாகம் கடந்த 2025 ஆண்டு தை மாதம் பொறுப்பேற்றதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் பிரதேச செயலக ரீதியாக இணைப்பாளர்களை நியமிப்புச் செய்யும் இரண்டாவது விசேட கூட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அகில இலங்கை சமாதான நீதிவானும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சுதந்திர ஊடகவியலாளருமான சாமஸ்ரீ தேசமானிய உ.உதயகாந்த்  தலைமையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) மற்றும் மண்முனை மேற்கு (வவுணதீவு) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிற்கான இணைப்பாளர்கள் தெரிவு இதன் போது இடம்பெற்றது.

பட்டிப்பனை பிரதேச செயலக கேட்போர் கூட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது  மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தில் புதிய உறுப்பினர்கள் பலர் ஆர்வத்துடன் இணைந்து கொண்டதுடன்,  ஏற்கனவே பதிவு செய்திருந்த சமாதான நீதிவான்களும் தமது உறுப்புரிமையினை புதிப்பித்திருந்தனர்.

இதன் போது சமாதான நீதிவான்களுக்குள்ள இடர்பாடுகளை தீர்ப்பது, 10 வருடத்திற்கு மேல் மாவட்ட சமாதான நீதிவான்களாக கடமையாற்றும் சமாதான நீதிவான்களுக்கு முழு தீவிற்குமான சமாதான நீதிவான் நியமனத்தை சங்கத்தின் ஊடாக பெற்றுக்கொடுத்தல், சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது தலைவர் உள்ளிட்ட தற்போதைய நிருவாக சபை உறுப்பினர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் செயலாளர் தேசகீர்த்தி சமூகஜோதி ரீ.லெட்சுமிகாந்தன் (JP) யின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இணைப்பாளர்களை தெரிவு செய்யும் இவ் விசேட கூட்டத்தின் போது மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்கான இணைப்பாளர்களாக  சிதம்பரநாதன் ஜீவிதன் (ஜே.பி), கதிரமலை கேசகப்போடி (ஜே.பி), சந்திரப்போடி பிரதாப் (ஜே.பி), நல்லதம்பி ஜெயரஞ்சன் (ஜே.பி).ஆகியோரும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்கான இணைப்பாளர்களாக உருத்திரமூர்த்தி நவேந்திரன் (ஜே.பி), தில்லைநாதன் நித்தீஸ்வரன் (ஜே.பி), இராஜரெட்னம் பிரபாரெத்தினம் (ஜே.பி) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உப தலைவர் எம்.வை.ஆதம் (ஜே,பி), பொருளாளர் ஆயுள்வேத வைத்தியர் சபாரெத்தினம் சுதர்சன் (ஜே.பி), நிர்வாக சபை உறுப்பினர் என்.நவதாசன் (ஜே.பி), சங்கத்தின் கணக்காய்வாளர் வீ.தவராசா (ஜே.பி) உள்ளிட்ட மேலும் பல சிரேஸ்ட உறுப்பினர்களும் இதன் போது கலந்து கொண்டு தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதுடன் சங்கத்திற்கான வளர்ச்சிப்பாதைக்காக தாம் தொடர்ந்தும் சங்கத்துடன் கை தேர்த்து செயற்படவுள்ளதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்ப்பற்று (செங்கலடி), ஏறாவூர்நகர் (ஏறாவூர்) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிற்கான இணைப்பாளர் தெரிவு ஏற்கனவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.











Powered by Blogger.