சர்வதேச மனித உரிமைகள் தினம் நாளை 10.12.2024 திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு சிவில் அமையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தினத்தினை நினைவு கூறும் வகையில் "இப்போது எமது உரிமைகள், எமது எதிர்காலம்" எனும் தொனிப்பொருளிலான நிகழ்வென்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
சிவில் அமையத்தின் இணைப்பாளர் ஜே.கோபிநாத் தலைமையில் மட்டக்களப்பு மியாணி மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஹிசைடீன், சிவில் அமையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கண்டுமணி லவகுகராசா, திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர் என்.குகேந்திரராஜா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பிரதான அரங்க நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை மற்றும் விசேட அதிதிகள் உரை என்பன இடம் பெற்றதனைத் தொடர்ந்து, சிவில் அமையத்தின் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மனித உரிமை சார் மூன்று மாத பயிற்சி நெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளினால் "இளைஞர்கள் மத்தியில் சமூகப் பிரச்சனையை கையாள்வதற்கான போதிய புரிதல் இளைஞர்களுக்கு உண்டு, இல்லை" எனும் தலைப்பில் நடுவர் எழுத்தாளர் ஜீ.எழில்வண்ணன் அவர்களது மத்தியஸ்தத்தில் விவாத அரங்கு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து இளைஞர் யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமையத்தின் செயற்பாட்டாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது அகம் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கற்கை நெறியினை நிறைவு செய்த இளைஞர்கள் இதன் போது சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.