மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று (17) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறுவர்கள் அவர்களது உரிமைகளை அறிந்து கொண்டு அவர்களே அவர்களை உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் தன்னாமுனை மியாமி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மூன்று நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்கள் தலைமையில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி.மதிராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து சிறுவர் சபை உறுப்பினர்கள் பயனாளிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
செரி நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றுவரும் குறித்த செயலமவில் செரி நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் வீ.ஈ.தர்சன், செரி நிறுவனத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.பகீரதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.