மாவட்டத்தில் காட்டு யானைகளினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா? - இரா.துரைரெத்தினம் கேள்வி!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா என முன்னால் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அறிக்கையொன்றின் ஊடாக கேள்வியெழுப்பியுள்ளார்.
மாவட்டத்தில் மண்முனைப்பற்று (ஆரையம்பதி), காத்தான்குடி, பிரதேச செயலகங்களைத் தவிர ஏனைய 12 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக, போரதீவுப்பற்று (வெல்லாவெளி), மண்முனைதென்மேற்கு (பட்டிப்பளை) மண்முனைமேற்கு (வவுணதீவு), ஏறாவூர்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்றுவடக்கு (வாகரை போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் தினந்தோறும் இரவு பகலாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் வருகைகளைத் தடுப்பதற்கு யானைவேலி அமைக்கப்பட்டும் யானை வேலிகளை பராமரிப்பதற்கு பாதுகாப்பு அரண்கள் அமைத்து இரவுபகலாக யானை வேலிகளை பராமரித்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
காடுகளிலிருந்து கிராமங்களுக்குள் ஊடுருவும் யானைகளை காட்டுப் பகுதிகளிலேயே வைத்து தடுப்பதற்கும், அதையும் மீறி வேலிகள் ஊடாக வருகின்ற யானைகளை வேலியோரங்களில் வைத்து தடுப்பதற்கும் புதிய வேலிகளை அமைப்பதற்கும், காட்டு யானைகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஸ்டத்தையும், யானைகளினால் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அழிவுகளுக்கான நஸ்டஈட்டினையும் ஒரு வாரத்துக்குள் வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்வதோடு, இதற்கான திணைக்களங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அவர்களின் சேவைகளை ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா? என குறித்த அறிக்கையில் இரா.துரைரெத்தினம் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்,