தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை குற்றப்புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும் - தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து!!
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக முன்வைக்கும் பல குற்றச்சாட்டுக்களில் சில விடையங்களை குற்றப் புலனாய்வு துறைக்கு ஒப்படைத்து விசாரிக்க வேண்டிய தேவையுள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து இன்று (01) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர் விடுதலை கூட்டணியானது ஒரு மாபெரும் இயக்கமாக தந்தை செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகியோரினால் உருவாக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டு தலைவர் சிவசிதம்பரம் அவர்களும் அமிர்தலிங்கம் அவர்களின் வழி நடத்தலில் 18 ஆசனங்களை தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கொடுத்திருந்தார்கள்.
அதே போல் அதைத் தொடர்ந்து 1989 ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் 10 ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றிருந்தது. அதற்குப் பின் 1994 ஆண்டு 5 ஆசனங்களை பெற்ற எமது கட்சி மீண்டும் 2000 ஆம் ஆண்டும் 5 ஆசனங்களை பெற்றது.
2001 ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டு 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது. 2001 ஆண்டிற்குப் பின் 5 நாடாளுமன்ற தேர்தல்களை தமிழர் விடுதலைக் கூட்டணி சந்தித்திருக்கின்றது. இத்தேர்தல்களிலே தமிழர் விடுதலை கூட்டணி ஒரு ஆசனத்தையும் கூட பெறவில்லை, இதன் வரலாறு அனைவரும் அறிந்த விடையம்.
இன்று பாராளுமன்ற தேர்தலின் பின் மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்பன அடுத்த வருடம் இடம் பெறவுள்ளது.
அதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டியுள்ளது. இந்த வருடம் எமது பொதுச் சபை ஊடாக நான் தலைவராக்கப்பட்டேன்.
இன்று தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. அது மட்டுமல்லாது பல நபர்கள் குழுக்களாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களாக நீண்ட காலமாக இருந்தவர்கள் எல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வெளியே இருந்து தனியாக இயங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களும் நீதிமன்றத்தில் எல்லாம் கூட வழக்குகளை போட்டிருக்கின்றார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன, தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிருவாகத்திற்கு எதிராக கூட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது தலைவராக எனக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. முக்கியமாக எமது கட்சிக்குள் இருக்கும் இந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் சரி செய்யவேண்டும்.
அது மட்டுமன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியில் பல குற்றச்சாட்டுக்களுக்கு சரியான நடவடிக்கையினை எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதன் நிமிர்த்தம் நான் ஒரு விசேட குழுவை நியமிக்கின்றேன். அதில் முக்கியமாக சிரேஸ்ட உப தலைவர் அசோக்குமார் ஐயம்பிள்ளை, உப தலைவர்களான ரொபட் நிக்ஷன், பிலிப் முருகையா, கணேசநாதன் சபேசன் மற்றும் ஸ்ரீபாதம் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இன்று கட்சிக்கு வெளியே அல்லது கட்சிக்கு உரித்தானவர்களை அடையாளப்படுத்தி அவர்களது விபரங்கள் எல்லாம் திரட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
கட்சிக்கு எதிராக முன்வைக்கும் பல குற்றச்சாட்டுக்களில் சில விடையங்களை குற்றப் புலனாய்வு துறைக்கு ஒப்படைத்து விசாரிக்க வேண்டிய தேவையும் இருக்கின்றன. அதே போல் தேர்தல் ஆணையகமும் இந்த குற்றச்சாட்டுக்களை பரிசீலிக்க வேண்டிய தேவையும் இருக்கின்றன.
நான் உடனடியாக இந்த விடையங்களை அமுல்படுத்த இருக்கின்றேன். ஏன் என்றால் இன்னொரு தேர்தலுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செல்வதற்கு முன் கட்சிக்குள் இருக்கும் இந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் பரிசீலித்து, தீர்வினை காண வேண்டும்.
அதன் நிமிர்த்தம் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மக்கள் இயக்கமாக மீண்டும் வலுப்பெற வேண்டுமெனில் கட்சியைச் சார்ந்த அனைவரும், ஒன்றினைந்து வெளிப்படைத் தன்மையுடன், ஒரு புதிய நிருவாகத்தை தெரிவு செய்வதன் மூலம்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி மக்கள் முன் சென்று ஒரு தேர்தலிலோ அல்லது அரசியலோ செய்ய முடியுமென்ற யதார்த்தத்தை நான் உணர்ந்திருக்கின்றேன். எனவே அனைவரும் இணைந்து இந்த கட்சியை முன்னெடுக்க வேண்டும் என்றால் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரகாசமாக இருந்த வரலாற்றுச் சின்னமான உதய சூரியன் சின்னம் தற்போது எப்படி மங்கிப் போய் இருக்கின்றது என அனைவருக்கும் தெரியும்.
ஆனால் உண்மை என்னவென்றால் இந்த கட்சி ஒரு தனிப்பட்ட நபர்களின் சொத்து அல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணி பலரது தியாகத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கட்சி. ஆனால் இன்று கட்சியின் மீதும் கட்சியின் நிருவாகத்தின் மீதும், சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்கள் எல்லாம், அது வெறுமனே கட்சியை சார்ந்த விடையம் அல்ல, இது ஒரு பொது விடையம். அந்த விடையங்களை பொது வெளியில் வெளிப்படுத்தித்தான் நாங்கள் இயங்க வேண்டும். மறைத்து ஒழித்து செய்யும் விடையம் இது அல்ல என்றார்.