எமது பொருளாதாரம், எமது பண்பாடு, எமது அடையாளம் என இழந்து, கடைசியாக எமது இருப்பையே இழந்துவிடும் விளிம்பை நோக்கியே நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்- அருண்மொழிவர்மன்

எமது பொருளாதாரம், எமது பண்பாடு, எமது அடையாளம் என இழந்து, கடைசியாக எமது இருப்பையே இழந்துவிடும் விளிம்பை நோக்கியே நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து அவர்கள் இன்று மட்டக்களப்பிலுள்ள அவரது தலைமைக் காரியாலயத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒட்டுமொத்தமான தமிழ் தேசத்தின் மீட்சிக்காக, எனது மண் புரிந்த அர்ப்பணிப்புகளின் உச்சத்தையும் மட்டக்களப்புத் தமிழர்கள் என்பதற்காகவே, எனது மக்கள் சந்திக்க நேர்ந்த அவலங்களின் வலிகளையும், எனது வாழ்வால் உணர்ந்தவன் நான். தந்தை தாய் இருவரையும் ஒரேயடியாகப் பறிகொடுத்துவிட்டு, வெறுமையாக நின்ற எனக்கு, எனது மக்களின் ஒவ்வொரு குடும்பமும் சந்தித்த இழப்புகளின் தார்ப்பரியம், ஆத்மார்த்தமாகப் புரியும்.

அந்த வேதனை எத்தகையது என்பதனை, யாரும் சொல்லித் தெரியாமலேயே, நான் அறிவேன். எமது பண்பாட்டையும் எமது பொருளாதாரத்தையும் கட்டிக்காத்து, தமிழர்கள், தமிழ் நிலத்தில், தமிழர்களாகவே வாழ்வதிலேயே பல சவால்களை நாம் எதிர்கொண்டு நிற்கின்றோம். எமது வாழ்வாதாரங்களையும் நிலங்களையும் புறக் காரணிகளால் நாம் இழந்துகொண்டு போகின்றோம்.

இன்னொரு புறத்தில்  எம்மை அழுத்துகின்ற பொருளாதாரச் சுமையிலிருந்து மீள்வதற்காக, நாமாகவே எமது காணிகளை விற்றுவிட்டுப் பணம் சேகரித்துக்கொண்டு, தொழில்களைத்  தேடி நாம் வெளிநாடுகளுக்குச் செல்கின்றோம். 

இவ்வாறாக  தமிழர் பொருளாதாரம் சிதைவடந்து, தமிழ் நிலங்கள் வெறுமையாகின்ற போது எமது ஊஊர்களின் எல்லைகள் சுருங்கிவிடும் அபாயம் மிகப் பெரியதாக எங்கள் முன்னால் உள்ளது. இவ்வாறான நிலைமையே தொடர்ந்தும் நீடித்துச் செல்லுமானால், இறுதியாக ஒரு கட்டத்தில்  எமது பண்பாட்டு வாழ்வையும், எமது அடையாளத்தையும், எமது மண்ணிலேயே நாம் முற்றாக இழந்து நிற்கும் சூழலே மட்டக்களப்பிற்கு ஏற்படும். இவ்வாறாக  எமது பொருளாதாரம், எமது பண்பாடு, எமது அடையாளம் என இழந்து, கடைசியாக எமது இருப்பையே இழந்துவிடும் விளிம்பை நோக்கியே நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்.

இந்தச் சவாலினை நாம் எவ்விதம் எதிர்கொள்ளப் போகின்றோம்...? இந்தப் பேராபத்திலிருந்து நாம் எவ்வாறு எமது மட்டக்களப்பைக் காப்பாற்றப் போகின்றோம்...? தமிழருக்கான அரசியல் அதிகாரம் உறுதி செய்யப்படுவதன் ஊடாக மட்டுமே, அது சாத்தியமாகும்.

எமது மாவட்டத்தின் சிக்கலான சமூகப் புறநிலையில், தமிழர்களுக்கு ஒரு செழிப்பான பொருளாதார அபிவிருத்தி கூட, மதிநுட்பம் மிக்க ஓர் அரசியல் தந்திர அணுகுமுறை ஊடாகவே அடையப்பட முடியும்.

அத்தகைய தூரநோக்கு கொண்ட ஓர் அரசியல் அணுகுமுறையை சூட்சுமமாகக் கையாண்டு, எனது மாவட்டத்தில், எனது மக்களின் இருப்பைப் பாதுகாக்க, என்னால் முடியும் என்று நான் திடமாக நம்புகின்றேன். அதற்கு தேவையான ஓர் அங்கிகாரத்தையும் எனது மக்களாகிய உங்களது ஆணையையுமே, நான் இன்று வேண்டி நிற்கின்றேன்.

வரலாறு முழுவதுமே, எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டுவரும் எமது இனத்திற்கு, ஒரு மின்னல் கீற்றுப் போல, பூகோள அரசியல் நல்வாய்ப்புகள் எப்போதாவது கிடைக்கும். அந்த வாய்ப்புகளை எவ்விதம் பற்றிப்பிடித்து, எத்தகைய தந்திரோபாயத்தோடு நாம் கையாள்கின்றோம் என்பதிலேயே,

எமது எதிர்காலம் தங்கியிருக்கின்றது. சவால்களை வெற்றிகொள்வதற்கு வழி, கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துவதுதான். ஆனால், கடந்த காலத்தில், தமிழர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள், குறுகிய அரசியல் சிந்தனைகளுடன் வீணடிக்கப்பட்டுவிட்டன, என்பதே எமது வரலாறு. இதுவரை எப்படியாக இருந்திருப்பினும், இனிவரும் காலத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர்களுக்குக் கிடைக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பங்களை .வீணடிக்கப்போவதில்லை.

உலகத் தலைமை வல்லரசுகளுள் ஒன்றான அமெரிக்காவில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. அது ஒரு வாய்ப்பு. எமது நாட்டிலும், முன்னொருபோதும் இல்லாத விதமான, ஓர் அரசாங்கம் ஆட்சியில் ஏறியிருக்கின்றது. மேற்குலகை விமர்சிக்கும், பெருமளவுக்குச் சுதேசியம் பேசும், சீனாவுக்குச் சார்பு நிலையைக் கொண்டிருக்கும், ஒரு சிங்கள பௌத்தவாதக் கட்சி, இலங்கயில் ஆட்சிபீடத்தில் ஏறியிருக்கின்றது. இதுவும் கூட, சம காலத்தில் எமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வாய்ப்பு. இப்போது, எமக்கு முன்னால் உள்ள கேள்வி என்னவெனில், இந்த வாய்ப்புகளை எவ்விதம் கையாண்டு, எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம் என்பதுதான். தமிழ் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான இறையாண்மைப் பிரச்சனைக்கு ஓர் அணுகுமுறையும், மட்டக்களப்பு மக்கள் எதிர்கொண்டிருக்கும் உள்ளகப் பிரச்சனைக்கு இன்னொரு அணுகு முறையுமாக - நாங்கள் இரண்டு தளங்களில், இருவேறு வழிமுறைகளில், சாதுரியத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது..கடும்போகுத்  தமிழ் தேசியக் கோட்பாட்டில் இறுகப்பற்றி நின்று, அனைவரையும் எதிர்க்கும் நிலைப்பாடோ, அல்லது - ஒரேயடியாகச் சரணாகதியாகி அரசாங்கத்தின் பங்காளிகளாக அமைச்சரவையில் இணையும் நிலைப்பாடோ,.எமக்கு எத்தகைய நன்மையையும் இதுவரை கொண்டுவந்து சேர்க்கவில்லை என்பதை, .நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான், எமது தமிழர் விடுதலைக் கூட்டணி, ஏனைய தமிழ் கட்சிகளில் இருந்து மாறுபட்டு நிற்கின்றது. மாறுபட்டு நிற்கப் போகின்றது.

தமிழினத்தின் தனித்துவமான இறையாண்மைக் கோரிக்கைய, விட்டுக்கொடுக்காமலும் - அதே வேளை, ஒரேயடியாக அரசாங்கத்தை நிராகரித்து எதிர்க்காமலும், எமக்கு நேர்ந்த அனர்த்தங்களுக்குச் சர்வதேச சமூகமும் இந்தியாவுமே பொறுப்பு, என்பதை மறக்காமலும் - அதேவேளை, பூகோள அரசியல் சூட்சுமங்களின் ஊடாக, இதே சர்வதேச சமூகத்தை வைத்தே எங்களது இருப்பை எமது மண்ணில் பாதுகாக்க முடியும், என்ற யதார்த்தத்தை மறுக்காமலும், ஒரு சமநிலையான அணுகுமுறையையே நாம் கைக்கொள்ள வேண்டும்.

அவ்வாறாகவே - தமிழினத்தின் உரிமை மீட்பையும், மட்டக்களப்பின் பாதுகாப்பையும் நாம் சாத்தியமாக்க முடியும். அரசியல் உரிமைகள் பற்றிப் பேசுவதை, இப்போது இங்கே சிலர் ஏளனம் செய்கின்றார்கள். பொருளாதார அபிவிருத்தி மட்டுமே போதும் என்கிறார்கள்.

வேறு சிலரோ, அரசியல் உரிமையே அடிப்படையானது என்றும், அதனைப் பெற்ற பின்னரே பொருளாதார அபிவிருத்தி சாத்தியமானது என்றும், வாதிடுகின்றார்கள். ஆனால்  மட்டக்களப்பு மாவட்டத்தை தனித்துவமாக மையப்படுத்திய பொருளாதார அபிவிருத்தியையும், ஒட்டுமொத்தமான தமிழ் தேசத்திற்குமான ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கான அரசியல் முன்னெடுப்புகளையும், சமாந்தரமாக முன்னெடுப்பதே எனது நோக்கம். அதுவே சிறந்த வழியும் கூட. அரசியல் அதிகாரம் எமது கையில் இல்லாத பொதுளாதார அபிவிருத்தி நிலைக்காது.

உரிமைகளைப் பெற்ற பின்னர் அபிவிருத்தியைச் செய்யக் காத்திருந்தால், எமது ஊர்களில் மக்கள் இருக்க மாட்டார்கள். தனக்கெனத் தனித்துவமான நீண்டதொரு பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், நிலத்தோடும் நீரோடும் அறிவோடும் கலந்த, பொருளாதாச் செழிப்பையும் கொண்டிருந்த, எமது மட்டக்களப்பு மண்ணை, அதே பழைய கம்பீரத்துடனும், புதிய செழுமையுடனும், உயர் மதிப்புடனும், நாம் நிமிர்த்த வேண்டும். அந்த நெடும் பயணத்தில் - என்னில் உறுதியான நம்பிக்கை வைத்து - என்னோடு கை கோர்த்து வாருங்கள் என, எனது அன்புக்குரிய உங்கள் ஒவ்வொருவரையும், நான் உரிமையோடு அழைக்கின்றேன் என்றார்.



Powered by Blogger.