மட்டக்களப்பு கல்லடி வேவிசிங்கம் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்தே பணத்தை இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளை இட்டுச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் குறித்த வீட்டின் குளியலறை ஜன்னல் கதவை உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்து அலுமாரியை உடைத்து அலுமாரியில் இருந்த 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங். (இலங்கை நாணயப்படி இரண்டு கோடி 40 லட்சம்) மற்றும் ஒன்றேகால் பவுண் தங்கம் 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் தனிமையாக தங்கி இருந்த 62 வயதுடைய பெண்மணியை கடுமையாக தாக்கி விட்டு மேற்படி கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவரும் மகளும் ஸ்விஸ் நாட்டில் தங்கி இருக்கின்ற நிலையில் குறித்த பெண்மணி ஸ்விஸ் நாட்டு பிரஜையாக இருந்த போதிலும் தனது வீட்டை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்து தனது வீட்டில் தங்கி இருப்பதாக தெரிவித்தார்.
1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சுவிஸ் நாட்டுக்குச் சென்ற குறித்த தம்பதியர் கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் சுவிஸ் நாட்டில் பணியாற்றுகின்ற வேளை குறித்த பெண்மணி சுவிஸ் நாட்டில் தாதியாக பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்றுள்ள நிலையில் மீண்டும் நாடு திரும்பி தற்காலிகமாக தங்கி இருந்த நிலையிலேயே குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோனேஸ்வரி என்கின்ற பெண்ணின் வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரும் மகளும் சுவிஸ் நாட்டில் தொழில் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தலைமையில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.