எதிர்வரும் 14 ஆம் திகதியின் பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாசா தெரிவு செய்யப்படுவார் - தயானந்தன்

எதிர்வரும் 14 ஆம் திகதியின் பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாசா தெரிவு செய்யப்படுவார். அதன் பின்னர் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை  எனது தலைமையிலே முடிப்பேன். அதேவேளை நாங்கள் களவாடுவதற்கு அரசியலுக்கு வரவில்லை இந்த மக்களினுடைய அவலங்களைக் கண்டு சேவை செய்வற்காக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டோம்  என ஐக்கிய மக்கள் சக்தி ரெலிபோன் சின்னத்தில் 3 இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் தயாந்தன் தெரிவித்தார்.

சந்திவெளி பாலையடிதோனா பிரதேசத்தில் நேற்று (04) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின்  மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதுடன் எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவுடன் நேரடித் தொடர்பான பயணத்தில் நான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.

கடந்த கால வரலாற்றை நாங்கள் முற்றாக ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக இம்முறை இந்த தேர்தலில் பயணிக்கின்றேன். எனவே இந்த தேர்தல் ஒரு மிகவும் தீவிரமான தேர்தல் அதாவது மாவட்டத்திலே 49 கட்சிகளைச் சேர்ந்த  392 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிலும் யார் வெல்லப் போகின்றார் என்பதை இம் மாதம் 14ஆம் திகதி எங்களுக்கு தெரியும்.

இந்த மாவட்டத்திலே கப்பம் கொள்ளை, கொலை செய்தவர்கள் நாங்கள் முஸ்லிம்களுக்கு வாக்கெடுத்து கொடுக்கப் போகின்றோம் என பொய்ப்பிரச்சாரம் செய்து எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள். நான் கடந்த 20 வருட காலமாக இந்த மாவட்டத்தில் வாகரை தொடக்கம் துறைநீலாவணை வரை அதே போன்று  புல்லுமலை பகுதி உட்பட மாவட்டம்  பூராகவும் ஒரு சமூக சேவை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக  மக்களுக்கு மிகவும் திறம்பட செயற்பட்டு சேவையாற்றி வருகின்றேன்.

அந்த வகையிலே நான்  முஸ்லிம்களுக்கு வாக்கெடுத்து கொடுப்பதற்கு எந்த வகையிலும் நான் எத்தணிக்க போவதில்லை. அவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப் போவதுமில்லை.

கடந்த காலங்களிலே வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டவர்கள் இன்று தமிழரசு கட்சியிலே கூச்சலிடுகின்றார்கள். அன்று வெற்றிலை சின்னத்தில் போட்டி இட்டு வாக்குகளை தாரை வார்த்து கொடுத்தவர்கள் அவர்கள் தான் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.

நான் இந்த கிராமத்துக்கு புதியவராக இருந்தாலும் இந்த மாவட்டத்திலே பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றேன். எங்களுடைய கட்சி தலைவர் கடந்த காலங்களில் வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளையிலே நாங்கள் அவர்களோடு தோளோடு தோள் நின்று செய்யப்பட்டவர்கள்.

இருந்தாலும் எங்களுடைய தொகுதிக் கூட்டத்திலே உறுதியாக கூறப்பட்டது. இந்த வீடமைப்புத் திட்டம் எங்களுடைய கடந்த கால அரசாங்கத்திலே புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம்  எதிர்க்கட்சி என்ற காரணத்தினால் தான்.

எனவே அந்த அடிப்படையிலே வருகின்ற 14 ஆம் திகதிக்குப் பிறகு இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவார். அதன் பிற்பாடு இந்த வீடமைப்பு திட்டங்கள் முடிவுறுத்தப்படாமல் இருக்காது. நிச்சயமாக என்னுடைய தலைமையிலே நான் முடித்து தருவேன். அதேபோன்று புதிய வீட்டுத் திட்டங்கள் மலசல கூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் கிணறுகள் இல்லாதவர்களுக்கு கிணறுகள் கட்டிக் கொடுப்பேன்.

அதேவேளை சூறையாடப்பட்டிருக்கின்ற காணிகளை மீட்டு அதனை எங்களுடைய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் அது மாத்திரம் அல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த காணி பகிர்ந்தளிப்பதற்கு நாங்கள் முன் நின்று இந்த மக்களுடைய சேவைகளை நிச்சயமாக திறம்பட செய்து வைப்பேன் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

மாவட்டத்தில் கல்குடா தொகுதி பட்டிருப்பு தொகுதி மற்றும் மட்டக்களப்பு தொகுதிகளான 3 தொகுதிகளிலும் என்னுடைய இளைஞர் அணிகள் பாரிய அளவிலே என்னுடன் கைகோர்த்து நிற்கின்றார்கள். அதனைத் தான் என்னுடைய வெற்றியாக கருதுகின்றேன். எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திங்கும் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற எனக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



Powered by Blogger.