ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் சர்வதேச நினைவுநாள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமும் இன்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இந்நினைவு கூரலை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேற்படி அமைப்புக்களின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நினைவு கூரலில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு மட்டு.ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.கங்காதரன் ஆகியயோர் இணைந்து மலர்மாலை அணிவித்தனர்.
இதன்போது ஊடகரின் நினைவாக அகல் விளக்கேற்றி,மலர் தூபி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.