எம்மிடம் ஆட்சியதிகாரம் கையளிக்கப்படும் போது மக்களுக்கு வினைத்திறனான சேவையை ஆற்ற உறுதி பூண்டுள்ளோம் - மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன் தெரிவிப்பு!

நாங்கள் தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூலம் 5 ஆண்டு காலம் மிகத் திறமையாக மாநகர மக்களுக்காகப் பணிபுரிந்துள்ளதாக முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமக்கான ஆதரவை மக்கள் வழங்க வேண்டுமெனக் கோரி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வூடகச் சந்திப்பு கல்லடியிலுள்ள அவரது உத்தியயோகபூர்வ அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,

இக்காலப் பகுதியில் மட்டக்களப்பு மாநகர மக்களுக்கு வினைத்திறனும், விளைதிறனுமான சேவைகளை வழங்கியிருந்தோம்.

இதன்போது 500 க்கும் அதிகமான வீதிகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு தேவையான வடிகான்களும் தூர்வாரப்பட்டுள்ளது.

உலகில் அதாவது தெற்காசியாவில் அதிலும் குறிப்பாக இலங்கையின் மட்டக்களப்பு மாநகரில் சிறுவர் சினேகபூர்வ நகர அபிவிருத்திச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தி, அதில் நாம் வெற்றியடைந்திருந்தோம்.

இதன் மூலமாக எமது செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது. இதன்போது சிறப்பாகச் செயற்பட்ட 5 மாநகர முதல்வர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதில் ஒருவராக நானும் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். 

இவ்வாறு நான் தெரிவு செய்யப்பட்டமையானது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கை முழுவதற்கும் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்திருந்தது.

அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாநகர சபையில் எமது ஆட்சிக் காலத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியிருந்தோம். குறிப்பாக அரசாங்க நிதியை அல்லது மாநகர மக்களின் வரிப்பணத்தை மட்டும் நம்பியிருக்காமல் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களோடு நாம் சேர்ந்து செயற்பட்டு பல்வேறு செயற்றிட்டங்களை முழுமை பெறச் செய்துள்ளோம்.

இதன்போது எம்மோடு யுனிசெப், யு.என்.டி.பி மற்றும் ஏசியா பவுண்டேசன் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து 5 வருடங்கள் பணியாற்றியிருந்தன. இதன் மூலம் எம்மால் மக்களுக்கான பல்வேறு செயற்றிட்டங்கள் முழுமைபடுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் நகரில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மட்டக்களப்பு மாநகரசபை ஊடாக வெள்ளம் வழிந்தோடுவதற்கான செயற்றிட்டங்களை உடனுக்குடன் களத்தில் நின்று அமுல்படுத்தியிருந்தோம்.

இவ்வாறான நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கொவிட் - 19 தொற்று காலத்தில் மட்டக்களப்பு மாநகருக்குள் எந்தவிதமான பிரச்சினைகளும் வராமல் நாங்கள் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று சேவையாற்றியுள்ளது கண்கூடு.

அதேபோன்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் உடனடியாகக் களத்தில் நின்று எமது மக்கள் பாதிக்கப்படாத வகையில் பல்வேறு செயற்பாடுகளை மக்கள் நலன் சார்ந்து மேற்கொண்டிருந்தோம். அதுமட்டுமன்றி இனமுரண்பாடுகள் ஏற்படாமலும் எமது மக்களைப் பாதுகாத்திருந்தோம்.

இதன் மூலமாக மட்டக்களப்பு மாநகருக்குள் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாத வண்ணம் நாங்கள் தொடர்ச்சியாக நின்று மக்களுக்குப் பணியாற்றியிருந்தோம்.
இவ்வாறான செயற்பாடுகள் அனைத்துக்கும் எமது வட்டாரத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களது ஆதரவு எமக்குக் கணிசமான அளவு கிடைத்திருந்தது. குறிப்பாக எமது ஆட்சியின் இறுதிக்ககால கட்டத்தில் இறந்தவர்கது உடல்களைத் தகனம் செய்யும் நிலையம் ஒன்றைக் கள்ளியங்காட்டில் அமைத்திருந்தோம்.இந்நிலையத்தை அமைக்கும்போது பல்வேறு நெருக்குவாரங்கள் எம்மீது திணிக்கப்பட்டிருந்தது. 

இதன்போது நாம் அத்தடைகளை எல்லாம் முறியடித்து அந்நிலையத்தை மக்களிடம் கையளித்திருந்தோம். 

அத்தோடு மட்டக்களப்பு மாநகரின் எல்லைக் கிராமத்திலுள்ள வடிகான்கள் அடைக்கப்பட்டிருந்தது. நாம் அவற்றை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகமவின் உதவியோடு அனைத்து வடிகான்களும் தூர்வாரப்பட்டு, வெள்ளம் வடிந்தோடக் கூடிய வகையில் எமது செயற்பாடுகளைச் செய்திருந்தோம்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் எனக்குக் கிடைத்த அதிகாரத்தை  மாவட்டத்துக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நான் இம்முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

நான் இதில் வெற்றிவாகை சூடுமிடத்து எமது வளங்களான விவசாயம், மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் செயற்றிட்டங்கள் வகுக்கப்படும்.

அதேபோன்று கொடூர யுத்தத்தினால் கணவனை இழந்துள்ள விதவைகளுக்காகப் பல்வேறு பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகள் எம்மால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தற்சார்புப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகையிலான திட்டங்களை முன்மொழிந்து,அதன் மூலமாக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நாம் அமுல்படுத்தலாம்.

இவ்வாறான செயற்பாடுகளை எமக்கான அதிகாரங்கள் கிடைக்கும்போது பூரணமாகச் செயற்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.

இத்தகைய நிலையில் எமது உரிமை சார்ந்த மயிலத்தமடு மாதவனைப் பிரதேச நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் தமிழரசுக் கட்சியாக ஒருமித்த நிலையில் குரல் கொடுக்க வேண்டும். இதற்கு நாம் அதிக ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும். அவ்வாறு நாம் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் செயற்பட முடியும். 

அந்தச் சக்தியை எமக்கு வழங்குவதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான வீட்டுக்கு வாக்களிப்பதோடு, எனது இலக்கமான 7 இற்கும் புள்ளடியிட்டு வெற்றியடையச் செய்ய வேண்டுமென்றார்.




Powered by Blogger.