சந்திவெளி படகு பாதை கடந்த இரண்டு மாதங்களாக சேவையில் இல்லாதமையினால் குறித்த படகு பாதையினை பயன்படுத்தும் பொது மக்கள் உள்ளிட்ட கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களும் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட திகிலிவெட்டை, குடும்பிமலை, பேரில்லாவெளி, கோறாவெளி, பொண்டுகள்சேனை, அக்குரானை, முறுத்தானை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஈரளக்குளம் கிராமத்தினை சேர்ந்த மக்களும் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியினை அடைந்து தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்குமாக சந்திவெளி ஆற்றினை படகு பாதை ஊடாக கடந்து செல்லும் நிலையில் குறித்த படகுப்பாதையானது கடந்த இரண்டு மாதங்களாக செயலிளந்துள்ளது.
இப்படகுப் பாதையானது செயலிளந்துள்ளமையினால் பல மைல் தூரம் சுற்றியே தாம் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேற்குறித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தமது போக்குவரத்தினை நேரவிரையமின்றி விரைவாகவும் சுமூகமாகவும் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறித்த படகுப் பாதையானது பழுதடைந்துள்ள நிலையில் மேற்குறித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தாம் போக்குவரத்திற்காக பலத்த அசௌகரியங்களையும் நேர விரையத்தினையும் எதிர்நோக்கி வருவதாகவும் அப்படகுப்பாதையினை சீர் செய்து தருமாறும் கோறளைப்பற்று பிரதேச சபையிடம் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.