10 சுயேட்சைக் குழுக்களும், 10 கட்சிகளும் மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணா அம்மான் மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரது கட்சிகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் 14 ஆம் தேதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த (4) திகதி முதல் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இதுவரையில் 10 சுயேட்சை குழுக்களும் 10 அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தேசிய ஜனநாயக முன்னணி கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளார்.
அத்தோடு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளார். அத்தோடு மேலும் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த (04) திகதி முதல் இன்று வரை 10 சுயேட்சை குழுக்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, மக்கள் போராட்டம் முன்னணி, ஜனசத்த பெரமுனை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட பத்து கட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதேவேளை நாளை 11 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.