மட்டக்களப்பில் இரண்டு வாக்காளர்களுக்காக தனியான வாக்களிப்பு நிலையம்!!


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 திகதி இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதே வேளை மாவட்டத்தில் இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள 449,606 பேர் வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த தேர்தல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று  வந்த 2 நோயாளர்களுக்காக மாந்தீவிலேயே விசேட வாக்களிப்பு நிலையம் நிறுவப்பட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் குறித்த இரண்டு நோயாளர்களும் மாந்தீவு வைத்தியசாலையில் இல்லாதமையினால் இத் தேர்தலில் அவர்கள் இருவரும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மண்டப இல - 3 இல் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இருவருக்குமாக விசேடமாக மேற்கொள்ளப்படவுள்ள இவ் வாக்களிப்பு நிலையத்திற்கு இவர்கள் வருகை தரும் பட்சத்தில் தமது வாக்குகளை பதிவு செய்யலாம் எனவும் பொதுவான வாக்கெடுப்பு நிலையத்தில் பின்பற்றப்படும் சகல நடைமுறைகளும் இங்கு பின்பற்றப்படவுள்ளது எனவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் ஊடகங்களுக்கு கருக்கு தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.