எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 04ம் திகதி ஆரம்பமாகின்றது.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தமது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வதற்கான திகதி தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்ய தேர்தல் திணைக்களத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் செப்டம்பர் 5ம், 6ம் திகதிகளில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஏனைய திணைக்கள அரச உத்தியோகத்தர்கள் தமது திணைக்களங்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தினங்களில் வாக்களிக்கத் தவறும் அரச உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 11ம், 12ஆந் திகதிகளில் தத்தமது மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வாக்களப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூலம் வலுக்களிப்பதற்கு 13 ஆயிரத்தி 448 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 13 ஆயிரத்தி 116பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 332 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.