முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் - பூ.பிரசாந்தன்

மாணவர்களை பாடசாலைக்கு செல்வதற்கு தயார்படுத்தி சமூக நீரோட்டத்தில் இணைக்கின்ற அளப்பரிய பணிகளை மேற்கொள்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். 

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பட்டிப்பளை அரசடித்தீவு விக்னேஸ்வரா முன்பள்ளி பாடசாலைக்காக கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட உபகரண தொகுதியை வழங்கி வைக்கும் நிகழ்வின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில் சமூகத்தில் பெற்றோருடன் இருக்கின்ற குழந்தைகள் சமூக நீரோட்டத்திற்கு செல்கின்ற முதல் படியாக பாலர் பாடசாலைகள் அமைந்திருக்கின்றன. 

சமூக உணர்வு, கல்வி கற்பதற்கான ஆர்வம், சமூகத்தில் வாழக்கூடிய நிலைமைகளை உணர்த்தி சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்குகின்ற ஆரம்ப பணியினை முன்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு இருக்கின்றார்கள். 

இவ்வாறு யுத்த காலத்திலும் அதன் பின்னரும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கற்பித்துக் கொண்டிருந்த முன்பள்ளி ஆசிரியர்களையும் முன்பள்ளி பாலர் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து சமூக அந்தஸ்தினையும் அரச அங்கீகாரத்தினையும் வழங்கும் நோக்கோடு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது முதன் முதலாக கொண்டு வரப்பட்ட நியதிச் சட்டம் பாலர் பாடசாலை பணியக நியதிச் சட்டமாகும். அதன் மூலமே பாலர் பாடசாலைகளுக்கான அங்கீகாரம் கிடைத்ததுடன்  அவ் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு மேலதிக கற்பித்தலுக்குரிய  பயிற்சிகளும் வழங்கப்பட்டு மாதாந்தம் சிறிய கொடுப்பனவாக நாலாயிரம் ரூபாய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இது வாழ்க்கை செலவை நடத்துவதற்கு போதுமானதாக அமையாத போதும் அரச அங்கீகாரம் கிடைக்கப்பட்டது. இந்த கொடுப்பனவினை அதிகரிக்கச் செய்வதுடன் நாம் கிழக்கின் தலைமைகளை மீண்டும் மாகாண சபை அதிகாரங்களை கையகப்படுத்துகின்ற போது இவ் ஆசிரியர்கள் சமூக பொருளாதார நீரோட்டத்தில் வாழக்கூடிய அளவிற்கான சம்பள கொடுப்பனவுகள் வழங்கப்படுவது மட்டுமன்றி பாலர் பாடசாலைகளுக்கான புறச்சூழல்களும், அகச்சூழல்களும் புனரமைக்கப்பட்டு சின்னஞ்சிறார்கள் விரும்பி கற்கக் கூடிய போட்டிமிக்க உலகத்தில் சவால்களுக்கு மத்தியில் முகங்கொடுக்கக் கூடிய கற்பித்தல் முறையுடன் அதற்கான சூழலும், சர்வதேசத்துடன் போட்டி போடக்கூடிய அளவிற்கு தகுதியான முன்பள்ளிகள் அமைத்து கொடுப்பதற்கான திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றது. அத்தோடு முன்பள்ளி பாலர் பாடசாலை, மாகாண பணிமனை உள்ளிட்ட நிர்வாகங்களில் வேகப்படுத்துவதற்கான நிர்வாக சுற்றோட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வருவதும் எமது திட்டமாக இருக்கின்றது.

கல்வி புலம் சார்ந்து சூழலை உருவாக்குவதன் ஊடாக தன்னிறைவுள்ள தலைமைத்துவ பண்புகளை சமூகத்தில் வளர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதற்கு நாம் என்றும் பின் நிற்கப்போவதில்லை. ஆசிரியர் என்கின்ற நாமத்தை மாத்திரம் வைத்து கொண்டு பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்ற முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியர்களின் வலுவளவினையும் பொருளாதார வலுவாக்கத்தினையும் மேற்கொள்வோம். இன்று பாலர் பாடசாலை முன்னுதாரணமாக இவ் பாடசாலைகள்  திகழ வேண்டும் என்பதற்காக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்படுகின்றது. 

அதே போன்று இவர்களுக்கான ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் விரைவில் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். 

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிப்பளை பிரதேசக் குழு செயலாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ம.குகநாதன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல்துறை செயலாளர் ஞானம் (சின்னா மாஸ்டர்) பிரதேச இளைஞர் அணிச் செயலாளர் சி.புலக்ஷன்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






Powered by Blogger.