ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் மட்டு ஊடக அமையம்!!

யாழில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று மட்டு.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம்,அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. "திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது.

கோழைத்தனமாக ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கவேண்டும்.

வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தமது கடமையினை முன்னெடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகளை கருத்துக்களால் எதிர்கொள்ளமுடியாதவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் தங்களது அடாவடித்தனங்களையும் அச்சுறுத்தலையும் ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கும் நிலைமையினை தடுக்கும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

ஊடகவியலாளர் பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் ஓரளவாவது சுதந்திரமாக தமது கடமைகளை முன்னெடுப்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும்.

கடந்த காலத்தில் வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை முன்னெடுக்கமுடியாத வகையிலான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.எனவே இவ்வாறான நிலைமைகள் இல்லாமல்செய்யப்பட்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Powered by Blogger.