விபுலானந்த வித்தியாலயத்தின் 64 ஆவது வருடப் பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர்களிடையே கிரிக்கெட் சுற்று போட்டியும், சாதனையாளர் கௌரவிப்பும்!!
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் 64 ஆவது வருடப் பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிநாள் நிகழ்வும், வெற்றியீட்டிய அணிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும், சாதனை மாணவர்களுக்கு கெளரவம் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமாகிய கே.தவேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு கல்லடி ராமகிருஸ்ணமிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் மற்றும் கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்குத் தந்தை அருட் தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் ஆகியோர் ஆன்மீக அதிதிகளாகவும், ரணில் 24 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பிரதம அதிதியாகவும், முன்னாள் பாடசாலை அதிபர் வ.சொக்கலிங்கம் மற்றும் முன்னாள் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
15 பழைய மாணவ அணிகள் பங்கு கொண்ட 5 ஓவர்களை உள்ளடக்கியதான சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வுகள் இடம் பெற்று, சாதனை மாணவர்கள் பாராட்டும், மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் கௌரவமும் நிகழ்வும் இடம் பெற்றது.
இச்சுற்றுத் தொடரில் முதலாம் இடத்தினை 2013 ஆம்ஆண்டு பிரிவு மாணவர்களின் ஈஸ்டன் கிங்பிஸ்ஸர் அணியும்,இரண்டாம் இடத்தினை 2019 ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களின் பைற்றிங் பஃல்கன்ஸ் அணியும் பெற்றுக் கொண்டன.
அத்தோடு பழைய மாணவர்கள் பங்கு கொண்ட கயிறு இழுத்தல் போட்டி அனைவரதும் கவனத்தையும் ஈர்த்தன. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரணில் 24 செயலணித் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் உரையாற்றுகையில், எமது மாணவர்களில் பெரும்பாலானோர் கலைத்துறையைத் தெரிவு செய்வதனால், பட்டப் படிப்பை நிறைவு செய்து காந்திப் பூங்காவில் போராட்டம் நடத்தும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலை எதிர்காலத்தில் மாற்றமடைய வேண்டும். வேலைவாய்ப்பை நாடி எமது பட்டப் படிப்புக்கள் மாற்றப்பட வேண்டுமென்றார்.