இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணத்திற்கான விளையாட்டு விழா இம் முறை மட்டக்களப்பில் இடம் பெற்றது.
பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் மற்றும் இலங்கை வங்கியின் கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளர் எச்.பிரியல்சில்வா தலைமையில் குறித்த விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (09) திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உஜித் என்.பி.லியனகே, கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தர் ரீ. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்த்த இலங்கை வங்கியின் உத்தியோகத்தர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் விளையாட்டு திறமையினை வெளிக்காட்டுவதற்கும் இவ்விளையாட்டு விழா களமாக அமையப்பெற்றுள்ளது.
இதன் போது உத்தியோகத்தர்களிடையே கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்தாட்டம், குண்டெறிதல், ஈட்டியெறிதல், ஒட்டப் போட்டிகள் என பல போட்டிகள் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இந்தியாவின் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு இடையிலான பாக்கு நீரிணையை நித்தி கடந்த புனித மிக்கேல் பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், வங்கி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.