அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் மற்றும் பொது நலவாய மன்றம் ஆகியன இணைந்து நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் செயலமர்வு இன்று (05) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி அசாத் முஸ்தபா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வினை இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.பஸ்லானின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான வழிகாட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டதுடன், தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களின் கடந்த கால அனுபவங்கள் பகிரப்பட்டதுடன், குறித்த துறை சார்ந்த சவால்கள் மற்றும் சாதக, பாதக நிலை தொடர்பிலும் இதன் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.
இச் செயலமர்விற்கு பிரதான வளவாளராக விடியல் பத்திரிகையின் பணிப்பாளர் ரிப்தி அலி கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இச்செயலமர்வுகளில் சுமார் 100 இற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டு, செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது.
ஊடகம் மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் சுமார் 15 வருட காலமாக இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.