மட்டக்களப்பு புகையிரத கடவை காப்பாளர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்!!


மட்டக்களப்பு புகையிரத கடவை காப்பாளர்கள் இன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 24 புகையிரத கடவைகளில் கடமையாற்றும் கடவை காப்பாளர்கள் தமது சேவையினை நிரந்தரமாக்கக் கோரி இன்று (25) திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 11 வருடங்களாக நிரந்தர நியமனம் இன்றி நாள் ஒன்றிற்கு 250/= ரூபாய் சம்பளத்திற்காக கடமையாற்றிவரும் இவர்களை அரசாங்கம் இவர்களை கடமையில் இருந்து நீக்கிவிட்டு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை குறித்த கடமையில் சேர்த்துக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கும் இதன் போது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு தமது நாளாந்த ஊதியமான 250/= ரூபாய் ஊடாக தமது வாழ்க்கையினை கொண்டு நடத்த முடியாது எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 கடவைகளில் 72 புகையிரத கடவை காப்பாளர்கள் இவ்வாறு நிரந்தர நியமனமின்றி கடமையாற்றி வருவதுடன், இலங்கை முழுவதுமாக 688 புகையிரத கடவைகளில் 2064 புகையிரத கடவை காப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் சில கடவைகளில் பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.








Powered by Blogger.