மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி கடற்கரையில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயமான தூய வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியிறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.
கடந்த (21) திகதி ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை திருச்செபமாலையும் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, கடந்த சனிக்கிழமை மாலை அன்னையின் திருவுருவ பவனி இடம்பெற்றதனைத் தொடர்ந்து நற்கருனை ஆராதனை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (24) திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்கான ஆலய திருவிழா இனிதே நிறைவடைந்துள்ளது.
இத்திருவிழா கூட்டுத் திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்ட இயேசு சபை மேலாளர் அருட்தந்தை சகாயநாதன் அடிகளார், அருட்தந்தையர்களான ஜோன் ஜோசப்மேரி, அனிஸ்டன், அருட்சகோதரிகள், அருட்பணியாளர்கள், துறவியர்கள் பங்குமக்கள் மற்றும் அயல்பங்கு மக்கள் என அதிகளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.