2023/2024 (மகா) பெரும்போகத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (13) திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களங்களினால் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், விவசாயிகளுக்கான வங்கிக் கடன் வசதிகள், விவசாயிகளுக்கான உரத்திற்கான மானியம் வழங்கல், காலநிலை மாற்றத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், நீர்ப்பாசன விநியோகம், விவசாய கமநல காப்புறுதி, மேச்சல் தரை பிரச்சினை, யானை வேலி பிரச்சினை, மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பெரும்போக பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டங்களிற்கான கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டது.
விவசாயிகளின் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு இதன்போது தீர்வுகள் எட்டப்பட்டதுடன், சில தீர்வுகளை எட்டுவதற்கான ஆலோசனைகளை மாவட்ட அரசாங்க அதிபரினால் இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ.பேரின்பராசா, மட்டக்களப்பு பிராந்திய பிரதி மாகாண நீர்பாசன பணிப்பாளர் வே.இராஜகோபாலசிங்கம், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் புனிதா பிரேமானந்த ராஜா, மத்திய நீர்பாசன பணிப்பாளர் என்.நாகரெட்ணம், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், பண்ணையாளர்கள் துறைசார் அதிகாரிகள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.