தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.
இதன்போது பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் பிரையன் என்.உடைக்வே அப்போஸ்தலிக்க நன்சியோ மற்றும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அதிவணக்கத்துக்குரிய பிதா/ அருட்கலாநிதி எஸ்.சந்துரூ பெர்ணான்டோ கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவித்தார்.
இதன் போதே தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி சேவையானது ஆரம்பித்து வைக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்திய மற்றும் இலங்கைக்கான பயணத்தை இலகுவாக்கும் வகையில் குறித்த சேவை அமையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மடு திருத்தலத்தில் வைத்து மேலும் தெரிவித்தார்.