இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சினோபெக் நிறுவனம் செப்டெம்பர் மாதம் முதல் நிறுவனத்தின் வர்த்தக நாமத்தில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்குள் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடனும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.