இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) இன்று (23) மாலை இதனை அறிவித்துள்ளது.
அந்த வகையில், நிலவில் கால் தடம் பதித்த அமெரிக்கா, சீனா, கலைக்கப்பட்ட சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, 4ஆவது நாடாக இந்தியா தனது பெயரை பதித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் திகதி பிற்பகல் 2.35 மணிக்கு ‘சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை தென்ஆப்ரிக்காவில் இருந்து பிரதமர் மோடி பார்வையிட்டதோடு, அவர் இதன் போது பேசுகையில், ‛‛நிலவை வென்றுவிட்டோம். வரலாறு படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இந்தியா நிலவில் காலடி பதித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாட்டு மக்களுக்கு எனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்
பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள் என்று கருதப்படும் நிலவில், சந்திரயான் – 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். நிலவில் லேண்டர் சாதனம் தரைஇறங்க உள்ள, 17 நிமிடங்கள் மிகவும் முக்கியமானது. இதை, திகிலான 17 நிமிடங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் முன்பு கூறியுள்ளதாவது: ராக்கெட் செலுத்தப்பட்டது, புவி வட்டப் பாதையில் பயணித்தது, அங்கிருந்து நிலவு வட்டப் பாதைக்கு செலுத்தப்பட்டது, நிலவு வட்டப் பாதையில் வலம் வந்தது போன்றவை மிக மிக முக்கியமான தருணங்களாகும். இந்த அனைத்து சவால்களையும் சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக சந்தித்துள்ளது.ரோவர் வாகனத்தை சுமந்து செல்லும் லேண்டர் சாதனம், நிலவின் மேற்பரப்பில் இறங்குவதுதான், மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமான அம்சமாகும்.சரியான நேரத்தில், சரியான உயரத்தில் இருந்து லேண்டர் சாதனம் நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க வேண்டும். இதில் மற்றொரு முக்கியமான விஷயம், சரியான வேகத்தில் செல்வது. சந்திரயான் – 2 திட்டத்தில், வேகத்தை குறைக்க முடியாததே பிரச்சினையாக முடிந்தது.
லேண்டர் சாதனத்தில், நான்கு இன்ஜின்கள் உள்ளன. இதை சரியான எரிபொருளைப் பயன்படுத்தி, வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.நிலவில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் இருந்து லேண்டர் தரையிறங்கும். அப்போது சரியான முறையில், வேகத்தை கட்டுப்படுத்தும், ‘பிரேக்’ பயன்படுத்த வேண்டும். நிலவில் இருந்து, 6.8 கி.மீ., தொலைவில் இருக்கும்போது, இதில் இரண்டு இன்ஜின்கள் நிறுத்தப்படும். மற்ற இரண்டு இன்ஜினிகள் உதவியுடன், வேகம் கட்டுப்படுத்தப்படும்.நிலவில் இருந்து 100 – 150 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது, நிலவின் மேற்பரப்பு, ‘ஸ்கேன்’ செய்யப்படும். அங்கு பள்ளங்கள் உள்ளதா, மேடாக உள்ளதாக, தரையிறங்க வசதி உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். அதைத் தொடர்ந்தே, லேண்டர் தரையிறக்கப்படும்.இந்த காரணிகள் எல்லாம் முன்னதாகவே ஆய்வு செய்யப்பட்டு, தரைஇறங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன், லேண்டர் சாதனத்துக்கு தரையிறங்குவதற்கான தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.மேலும், நிலவின் மேற்பரப்பில் உள்ள ஈர்ப்பு விசை உள்ளிட்டவையும் பார்க்கப்படும். துவக்கத்தில், வினாடிக்கு, 1.68 கி.மீ., வேகத்தில் தரையிறக்கப்படும்.
அப்போது, லேண்டர் சாதனமானது, நிலவின் மட்டத்துக்கு இணையாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில், 90 டிகிரி அளவுக்கு லேண்டர் சாதனம் திருப்பப்பட்டு, செங்குத்தாக தரைஇறங்கும்.நிலவில் லேண்டர் சாதனம் தரை இறங்கியதும், அதன் வயிற்றில் இருந்து ரோவர் வாகனம் மெதுவாக தரையிறங்கும். ஒரு நிலவு நாளைக்குள் அனைத்து சோதனைகளும் செய்யப்படும்.அதன்பின், அங்கு வெளிச்சம் இருக்காது. கும்மிருட்டாக இருக்கும். மேலும், மைனஸ் 180 டிகிரி அளவுக்கு குளிராக இருக்கும். இந்த நேரத்தில், ரோவர் சாதனம் செயல்பட முடியாது. மீண்டும் வெளிச்சம் வந்து, ரோவர் உயிர் பெற்றால், மற்றொரு நிலவு நாள் அங்கு இருந்து சோதனை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.