வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் மற்றும் Action Unity Lanka என்பன இணைந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா வழி காட்டலில் நடைபெறவுள்ள
மாபெரும் தொழில் சந்தை நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று (09) காலை 11 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் கலந்து கொண்டு தொழில் சந்தை நிகழ்வு தொடர்பாக முழுமையாக விளக்கமளித்துடன் அதனைத் தொடர்ந்து மனிதவலு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் மற்றும் அக்ஷன் யுனீடி லங்கா நிறுவனத்தின் மாவட்ட திட்ட இணைப்பாளர் அனுலா அன்டன் ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தொழில் சந்தை நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கையில்,
நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, தொழிற்படையின் ஆர்வம், திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில் உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் Action Unity Lanka என்பன இணைந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை மட்/மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் மாவட்ட செயலாளர் அவர்களின் வழி காட்டலில் நடைபெறவுள்ள
மாபெரும் தொழில் சந்தை நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட தனியார்துறை உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தொழில் கல்வி நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. இனங்காணப்பட்ட 1000 இற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களுடன் இணைந்துகொள்ளும் தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள விரும்பும் தொழில் தேடுனர்கள் உரிய தினத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு தங்களுக்குரிய தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை NVQ தொழில் கல்வி வாய்ப்பையும், சுயதொழில் வாய்ப்புக்கான வழிகாட்டலையும்,
Psychometric Test அடிப்படையிலான
தொழில் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மனித வலு வேலை வாய்ப்புத் திணைக்கள மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இவ்வருட த்துக்கான வேலைத்திட்டத்தில் இதுவரை பத்து பிரதேச செயலக பிரிவுகளில் பிரதேச தொழில் சந்தையும் (Divisional Job Fair) மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தொழில் சந்தையும் இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று பலருக்கு தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் நாட்டிற்கு சுமையில்லாத ஊழியர் படையில் ஒருவராக தொழிலற்ற இளைஞர், யுவதிகளும் இணைந்து கொள்ள விரும்பினால் இத்தொழில் சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு நீங்களும் பயன்பெறமுடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில் தேடுகின்ற இளைஞர், யுவதிகள் மாத்திரமின்றி ஏனையோரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.