கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில் COOP Fresh பல்பொருள் விற்பனை நிலையம் இன்று (10) திகதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தேசகீர்த்தி நா.சசிகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான என்.சிவலிங்கம், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வீ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர் பேராசிரியர் கே.ஈ.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரீ.சதானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகீரதன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில் COOP Fresh பல்பொருள் விற்பனை நிலையம் அதிதிகளினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில் குறித்த COOP Fresh பல்பொருள் விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டமையினால் இங்கு கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.