கிழக்கு மாகாண பிரதம செயலாளர், தனது 2023.03.08ம் திகதி அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் இடமாற்றம் பெற்ற அனைவரையும் விடுவிக்கும்படி கேட்டிருந்தும் சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாநகர ஆணையாளர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உட்பட சிலர் இதுவரை விடுவிப்புக்களை மேற்கொள்ள தவறியுள்ள நிலையில்
இது பிரதம செயலாளரின் பலவீனமா அல்லது கீழ் நிலை அதிகாரிகளின் பலமா என்று அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்க தலைவர் ஏ. ஜீ. முபாறக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருடாந்த இடமாற்றம் கிடைக்கப் பெற்றதும், விடுவிக்க வேண்டியது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.
விடுவிக்க வேண்டியவர்கள், விடுவிக்காத பட்சத்தில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது இடமாற்றத்தை மேற்கொண்டவர்களின் பொறுப்பாகும். இவர்கள் தங்கள் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாததனாலேயே முறைப்பாடுகள் செய்ய வேண்டியேற்படுகிறது.
இவ்வாறு முறைப்பாடுகள் செய்வதனால் முறைப்பாடுகளை செய்தவர்களுக்கும் ஏகபோகங்களை அனுபவித்தவர்களுக்கும் முரண்பாடு தோன்றுகின்றதேயல்லாமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.