மட்டக்களப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி!!



மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஜூலை மாதத்திற்கான அபிவிருத்தி  குழு கூட்டம் இன்று (25) திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் ஆகியோரது பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த  மாவட்ட  ஒருங்கிணைப்பு  குழு கூட்டத்தில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்கள் சார்ந்த பல்வேறுபட்ட பிரச்சனைகள் தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன், அவற்றிற்கான பல்வேறுபட்ட தீர்வுகள் தொடர்பாகவும் இதன்போது தமது ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் உட்பட ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள்  அவற்றில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்தல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், பல்வேறு மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கு இதன்போது ஒருங்கிணைப்பு குழு தலைவர் உள்ளிட்ட இணைத்தலைவர்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிக்குழுவினர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலக  உயரதிகாரிகள், உள்ளுராட்சி சபைகளின் உயரதிகாரிகள், மாவட்ட பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.



















Post Comments

Powered by Blogger.