இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கௌரவம்!!


இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக்கடந்த மதுஷிகனுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால்  கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தமையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நேற்று (26) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா  தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மதுஷிகனையும் அவரது பெற்றோரையும் சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றின் பாண்டு வாத்திய இசை முழங்க மலர்மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் வரவேற்புரையினை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன் நிகழ்த்தியதுடன் மதுஷிகன் தொடர்பான அறிமுகத்தினையும் நிகழ்த்தியிருந்தார்.

இதன்போது இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்துடன் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய சாதனையாளரான மதுஷிகன் பாராட்டப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால்  நினைவுச்சின்னம் மற்றும் நிதி அன்பளிப்பு என்பன வழங்கி கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மாணவனின் சாதனையினை மாவட்ட அரசாங்க அதிபர்,  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட செயலக  உயரதிகாரிகளினால் பாராட்டி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30 கிலோ மீற்றர்  தூரமுடைய பாக்கு நீரிணையை சுமார் 12 மணித்தியாலம் 58 நிமிடங்களில் நீந்திக் கரை சேர்ந்ததுடன், இவர் இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ளதுடன், கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன் இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி ஜனாதிபதி சாரணிய விருதினையும் பெற்றுள்ளார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.எஸ்.பஷீர், மாவட்ட  செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை மதிவண்ணன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன் சாதனை படைத்த த.மதுஷிகனை அனைத்து உத்தியோகத்தர்களும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.























Powered by Blogger.