சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மைய உறுப்பினர்கள் ஆதிவாசி தலைவருடன் சந்திப்பு!!


மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையம் சமாதான நீதிவான்களுக்கான ஒரு நாள் சுற்றுலாவொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான  நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மையத்தின் செயலாளர் ஓய்வுபெற்ற பொறிவளருமான துரைராஜா லெட்சுமிகாந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சுற்றுலாவின் போது மகியங்கனை - தம்பான பழங்குடி மக்களான ஆதிவாசிகள் மற்றும் அவர்களது  தலைவர் ஊறுவரிகே வன்னில அத்தோ ஆகியோருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன், பழங்குடி மக்களின் வாழ்கை வரலாற்றை பிரதிபலிக்கும் நூதனசாலையினையும் பார்வையிட்டுள்ளனர். 

பழங்குடி சமூகத்தின் மருத்துவம், வணக்க முறை மற்றும் அவர்களது பாரம்பரிய கலாசாரங்கள் என்பற்றை கண்டு களித்ததுடன், இவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பில் பல்வேறு விடயங்களையும் அறிந்துகொண்டுள்ளனர்.

அத்தோடு  மகாஓயா வெண்நீர் ஊற்றை பார்வையிட்டதுடன், நீர் வீழ்ச்சியில் நீராடி மகிழ்ந்ததுடன், குறித்த பகுதிகளை சேர்ந்த சகோதர இனத்தவர்களுடன் அன்நியோன்யமாக பழகியதுடன், பழங்குடியினரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொண்டதுடன், இன நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு சுற்றுப்பயணமாக குறித்த சுற்றுலா அமைந்திருந்ததாக சமாதான  நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் தெரிவித்துள்ளார்.

இச்சுற்றுலாவில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான  நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் 30 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன், குறித்த சங்கமானது மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்களின் நலனில் அக்கறையுடன் தொடர்ச்சியாக செயற்பட்டுவருவதுடன், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சமூக மேம்பாட்டிற்காக பாடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















Powered by Blogger.