கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் அதிவேக புகையிரதம் இன்று இரவு சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற புகையிரதம் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துள்ளானது.
இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரெயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.
உள்ளூர் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், கல்லூரிகள் தயார் நிலையில் இருக்கும் வகையில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காயம் அடைந்துள்ள பயணிகள் சிகிச்சைக்காக பாலசோர் மெடிக்கல் கல்லூரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 300 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சிகிக்கை பெறுகின்றனர்.
22 பேர் அடங்கிய தேசிய மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.