போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த விசேட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 255 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த காலப்பகுதியில் 34 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். இதில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய சம்பவங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.