சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் திருமணம்!!


மட்டக்களப்பு மாவட்ட சமாதான  நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முற்று முழுவதுமாக விழிப்புலனற்ற இருவருக்கு திருமணத்தினை நடாத்தி சமூக மேம்பாட்டிற்கான  முன்னுதாரன செயற்பாடொன்றினை இச்சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

ஆரையம்பதியைச் சேர்ந்த  பொன்னம்பலம் சுஜிதரன் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த சண்முகம்பிள்ளை சசிவதனி ஆகிய இருவருக்குமே திருமணத்தினை நிகழ்த்திவைத்துள்ளனர்.

இன்றைய தினம் 2023.06.25  திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரையுள்ள சுப முகூர்த்தத்த வேளையில் மண்முனைப்பற்று - ஆரையம்பதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், மட்டக்களப்பு மாவட்ட சமாதான  நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும்  உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், திருமண தம்பதியினரின் குடும்ப உறவினர்கள் என பெருமளவிலானோர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்ததோடு அன்பளிப்புக்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆரையூர் கலைஞர் கலாவிபூசனம் எஸ்.ரகுதாஸ் தலைமையிலான கலைஞர்  குழுவினர் மணமக்களை வாழ்த்தும் வண்ணம் பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், இவ்வாறான விழிப்புலனற்றோராக இருக்கும் விசேட தேவையுடையவர்களை தேடி திருமணம் முடித்து வைப்பதன் ஊடாக எந்தவொரு மனிதரும் வாழ்க்கையில் தனிமையானவர்கள் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்தும் வண்ணமே இவ்வாறான வர்களை தேடி திருமனம் முடித்து வைப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சமாதான  நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் செயலாளரும் ஓய்வுபெற்ற பொறிவளருமான துரைராஜா லெட்சுமிகாந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.













Powered by Blogger.