மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் இன்று (06) திகதி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக படையினர் வசம் இருந்து வந்த தனியார் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த காணியின் ஒரு பகுதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான 8.6 ஏக்கர் காணியே இன்று கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராட்சி அவர்களினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்ராஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களை இனங்கண்டு உரியவர்களிடம் காணிகளை ஒப்படைக்கும் தொடர் நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரினால் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
59 தனிநபர்களுக்கு சொந்தமான காணிகளே இன்று இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன், 231 வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் தீலூப பண்டார, கட்டளைத் தளபதி மேஜர் இசுறு சேனாநாயக்க, வாழைச்சேனை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட காணியின் உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்