பாக்கு நீரிணை நீந்திக் கடந்து மட்டக்களப்பு மாணவன் சாதனை!!


பாக்கு நீரிணை சுமார் 12 மணித்தியாலங்களில் நீந்திக் கடந்து புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சாரண மாணவனுமான தேவேந்திரன் மதுசிகன் சாதனையினை நிலைநாட்டி மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இன்று 28.05.2023 திகதி குறித்த மாணவனால்  இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன்  இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து  தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்துள்ளார்.

மதுஷிகன் தனது சாதனைக்கான முன்னாயத்தமாக கல்கிஸை கடற்கரையில் 20கிலோ மீற்றர் தூரம் வரை நீந்தியுள்ளார்.

தற்போது 20 வயதான மதுஷிகன், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பன்னிரண்டு வயதில் தனது நீச்சல் பயிற்சியை ஆரம்பித்து மாகாண மற்றும் திறந்த மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.

இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ள மதுஷிகன் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன்; இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தவேந்திரன் மதுஷிகன் தனது நீச்சல் திறமையினை சாதனையாக மாற்றுவதற்கு சாரண ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகம், கடல் சார் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒஷியன் பயோம் என்ற அமைப்பு மற்றும் தனது பெற்றோர்களான தந்தை தங்கையா தவேந்திரன்,  தாய் அகல்யா ரோஷினி ஆகியோர் தன்னை ஊக்குவிப்பதாக இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சாதனையினை நிலைநாட்டிய மாணவனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணைகரம் உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டியதுடன், மாணவனை பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









Powered by Blogger.