பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும்!!


பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு நீக்க தவறினால் அதற்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட சட்டங்கள் மக்களைக் காப்பதற்காகவன்றி, மக்களை அடக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களின் விளைவாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெற்றது.

இருப்பினும் இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் அச்சட்டத்தை நீக்குவதற்கோ அல்லது அச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின்றி நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அடக்குமுறையின் கைகளில் ஆணிகளுக்குப் பதிலாக இரும்புக்கூர் முனையைப் பொருத்தும் பாணியில் அதற்கு தீர்வு என கூறி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், ஊடக செய்திகள், அனைத்து வகையான போராட்டங்கள் மற்றும் பேரணிகளைத் தடைசெய்யும் வகையில் கொண்டுவரப்படும் இப்பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதென்பது நாட்டுமக்களின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப்புதைக்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Powered by Blogger.