மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மையலம்பாவெளி வாவியிலிருந்து மீனவர் ஒருவரின் சடலத்தை இன்று ஞாயிறன்று 16.04.2023 மீட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் உடனடியாக வாவிக்குச் சென்ற பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய நிருவாகப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சறூக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீனவர்களின் உதவியோடு வாவியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர்.
கை கால்களற்று உருக்குலைந்து பொருமிய நிலையில் மீனவரின் சடலம் வாவியிலிருந்து மீட்கப்பட்டது. முதலை கடித்துக் குதறியதனால் சடலம் கை கால்களற்ற நிலையில் உருக்குலைந்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு ஈச்சந்தீவு நாவற்காட்டைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய அமரசிங்களம் ஜெயச்சந்திரனுடையது என உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸாரிடம் மேலும் விவரம் தெரிவித்த உறவினர்கள், இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை 4 மணியளவில் ஈச்சந்தீவு துறையடியில் இருந்து தனது தோணியில் சென்றவர் வீடு திரும்பாததால் தாங்கள் ஈச்சந்தீவை ஒட்டிய வாவியில் தேடுதலை மேற்கொண்டபோதும் கண்டு பிடிக்கமுடியவில்லை. ஞாயிறன்று சடலம் மைலம்பாவெளி வாவியில் மிதப்பதாக எமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றனர்.
சடலம் உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வவுணதீவு மற்றும், ஏறாவூர் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.