மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு - 20 உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!


மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் விசேட சுற்றிவளைப் பொன்று மட்டக்களப்பு மாவட்ட  அளவுவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள்  திணைக்கள அதிகாரிகளினால் இன்று (08) திகதி முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு வர்த்தக உணவு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம்  வழங்கும் முகமாக அரசினால் விலை குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை கண்காணிக்கும் முகமாக விசேட சுற்றிவளைப்புக்கள் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது.

அதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட அளவுவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் விநாயகமூர்த்தி விக்னேஸ்வரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு நகர்ப்பகுதி உள்ளிட்ட காத்தான்குடி பகுதிகளில் உள்ள பொது சந்தைகள், வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், முத்திரையிடப்படாத நிறுவை அளவை உபகரணங்கள், பொதியிடப்பட்டுள்ள உணவுப்பொருட்களில் நிறை மற்றும் உள்ளீடுகள் தொடர்பான விளம்பரப்படுத்தல்கள் உள்ளனவா என்பது தொடர்பாகவும் பரிசோதிக்கப்பட்டதுடன், மனித நுகர்விற்கு பொருத்தமில்லாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 20 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், இன்றைய தினம் 120 இற்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள்  சுற்றிவளைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக மாவட்ட அளவுவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் விநாயகமூர்த்தி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



Powered by Blogger.