தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முடிவில் உறுதியாக நிற்க மாவையும் முடிவு!

 எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் பிற விடயங்கள் தெடர்பில் மத்திய செயற்குழுவின் நிலைப்பாட்டை கட்சித் தலைவர் என்ற முறையில் ஏற்றுக்கொண்டு செயற்படும் முடிவுக்கு மாவை சேனாதிராஜா வந்துள்ளார்.



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்றுமுன்தினம் பெரும்பாலும் ஐக்கியப்பட்டு பிரதிபலித்த கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் கட்சித் தலைவர் என்ற முறையில் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன

மத்திய குழு

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதன் மத்திய குழுவே கொள்கை வகுத்தல் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் அதிகாரம் கொண்ட சபையாகும்.

கட்சித் தலைவர் என்ற முறையில் மத்திய குழுவின் முடிவை தான் நடைமுறைப்படுத்துவது தமது கடமை என்று மாவை சேனாதிராஜா தமக்கு நெருக்கமான தரப்பிடம் மனம் திறந்து கூறியிருக்கின்றார்.

மத்திய குழுவின் சில முடிவுகள் எனக்கு உடன்பாடல்ல. மன வேதனையைக் கூட தந்துள்ளன.

ஆனால் கட்சியின் கொள்கை வகுக்கும் அந்த சபையின் மிகப் பெரும்பாலான உறுப்பினர்கள் , எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள்ஒரு சில விடயங்களில் தீர்க்கமான முடிவு எடுக்கும் போது, அதை மீறி நான் நடக்க முடியாது என்று குறிப்பிட்டு ஒரு தீர்க்கமான முடிவுக்கு மாவை சேனாதிராஜா வந்திருக்கிறார் என்று அறியவந்தது.

கட்சித் தலைவர்களின் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (10.01.2023) காலை கொழும்பில் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறுகின்றது.

அதன்போது தனது கட்சியின் மத்திய குழு வெளிப்படுத்திய கருத்து நிலைப்பாட்டை மாவை சேனாதிராஜா உறுதியாகப் பற்றி நிற்பார் என்று விடயமறிந்த வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டன.

புதிதாக தமிழ் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில்லை.

பங்காளிக் கட்சிகள்

பங்காளிக் கட்சிகள் தவிர்ந்த வேறு தரப்புகளை உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி கூட்டுச்சேர்த்துக் கொள்வதில்லை.

பங்காளிக் கட்சிகளுடன் உரையாடி வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொருத்தமான இடங்களில் தனித்தனியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தும், அதேசமயம் ஒரு மேடையில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தும், தேர்தலில் ஈடுபடுவது குறித்தும் தீர்மானிக்க வேண்டும் போன்ற தீர்மானங்களை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்றுமுன்தினம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த முடிவுகளை கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா முழு அளவில் பற்றி நிற்பார் என இப்போது தெரியவருகின்றது.

Powered by Blogger.