இலங்கையில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக பல இடங்களில் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை நீடிக்கிறது.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து சேவைகள் உட்பட, மக்களின் அன்றாட செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை அறிவிப்பை இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வீடுகள் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று(25) காலை மாவனெல்லை மூன்றாவது தபால் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகமை ஊடாக கம்பளை வரையிலான வீதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெருமளவான வாகனங்களை காவல்துறையினர் வழிமறித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.