விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் புலனாய்வு சேவை!

 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ்நாட்டில் தற்போது புதுப்பிக்க பாகிஸ்தான் புலனாய்வு சேவை (ஐஎஸ்ஐ) முயற்சிப்பதாக இந்திய செய்தி வெளியிட்டுள்ளது.





தென்னிந்திய மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியைத் தூண்டுவதற்கு பாகிஸ்தானின் புலனாய்வு சேவை (ISI) முயற்சித்து வருவதாக இலங்கையின் ஊடகமொன்றினை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சி

விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியை ஏற்பட்டுத்துவதற்காக, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல்களை மேற்கொண்டதாக கூறப்படும் ஒன்பது இலங்கையர்களை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் (NIA) இந்த வார தொடக்கத்தில் கைது செய்திருந்தது.

இதனையடுத்தே, குறித்த இலங்கை ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது முதல் ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பது வரை, இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க இந்தியாவுக்கு எதிரான சக்திகளை பாகிஸ்தான் ஆதரித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல்காரரான ஹாஜி சலீமுடன் இணைந்து இலங்கையர்களான குணசேகரன் மற்றும் புஷ்பராஜா ஆகியோரால் கட்டுப்படுத்தப்படும் இலங்கை போதைப்பொருள் மாஃபியாவின் நடவடிக்கைகள் அதனுடன் தொடர்புடையது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முயற்சி

தென்னிந்தியாவில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க பாகிஸ்தான் முயற்சிப்பது இது முதல் முறையல்ல. 2014 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு அமைப்பை தேசிய புலனாய்வு முகவரகம் கண்டுபிடித்துள்ளது.

இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் தமிழ்நாட்டில் சில செயற்பாட்டாளர்களை கண்காணித்ததுடன் அவர்கள் தாக்குதலுக்காக பல இலக்குகளை உளவு பார்த்தனர் என்பதையும் அந்த நேரத்தில் இந்திய உளவுச் சேவை கண்டுபிடித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதுப்பித்து, பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க பாகிஸ்தான் புலனாய்வு சேவை முயற்சிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்களை தேசிய புலனாய்வு முகவரகம் கைது செய்திருந்ததுடன், ஐரோப்பாவில் உள்ள சிலருடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்த செயற்பாட்டாளர்கள், விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்கு பயன்படுத்த பணத்தை ஈட்ட முயற்சிப்பதாக பின்னர் தெரிய வந்தது.

தமிழ் தேசியம்

இந்த நிலையில், தமிழ் தேசியத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க, பாகிஸ்தான் புலனாய்வு சேவை, கிராமப்புறங்களை குறிவைத்து வருவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் புலனாய்வு சேவையான ISI இன் ஒத்துழைப்புடன் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஆண்டுக்கு 380 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்படுவதாக இந்திய புலனாய்வு பிரிவின் ஆவணமொன்று கூறுகிறது.

இந்த பணத்தை பாகிஸ்தான் உளவுத்துறை, தமது பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்துகிறது என்றும் குறித்த ஆவணம் கூறுவதாக மேற்படி இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Powered by Blogger.