விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து 20 பெண்களிடம் மோசடி செய்த கல்யாண மன்னன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமண தகவல் மையம்
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான்சி ராணி (20). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் ஜான்சி ராணி தாயாரின் அறிவுறுத்தலையடுத்து மறுமணத்திற்கு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார்.
சில நாட்களில் பரமக்குடியை சேர்ந்த கார்த்திக் ஆரோக்கியராஜ் (26) என்பவர் ஜான்சி ராணியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தான் தனியார் வங்கி ஊழியர் எனவும், திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும் உங்களை மறுமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.
இதனை நம்பிய ராணி, கார்த்திக்குடன் தொடர்ந்து பேசிய நிலையில் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது, திருமணத்திற்கு தாலிச்செயின் வாங்கி வந்திருப்பதாகக் கூறி பிரேமாவிடம் செயின் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார்.
பொலிசில் புகார்
பின்னர் அவர் ஜான்சி ராணி கழுத்தில் அணிந்து இருந்த ஐந்து பவுன் நகைக்கு டாலர் போட்டு தருவதாக கூறி அதனை கார்த்திக் ஆரோக்கியராஜ் வாங்கி சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் காா்த்திக் ஆரோக்கியராஜ் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த ஜான்சி ராணி அவரை பல இடங்களை தேடி உள்ளார்.
இந்த நிலையில் காா்த்திக் ஆரோக்கியராஜ் கொடுத்த நகை போலி என தெரிந்த ஜான்சிராணி பொலிசில் புகார் அளித்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இதே மாதிரியான மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் காா்த்திக் ஆரோக்கியராஜ் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற ஏழாயிரம்பண்ணை பொலிசார் அவரை கைது செய்தனர்.
பலரிடம் மோசடி
விசாரணையில் காா்த்திக் ஆரோக்கியராஜ் விருதுநகர், விழுப்புரம், கோவை ,ஈரோடு, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 20க்கு மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 100 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததும் தெரிய வந்தது.
திருமணமாகி விவகாரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களை பற்றி திருமண தகவல் மையத்தில் தகவல்களை சேகரித்து அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நகைகளை வாங்கி சென்று மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.