நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலைமையில் பாதிக்கப்பட்டிருக்கும் கல்வி கூட்டுறவு சங்க (EDCS) அங்கத்தவர்களின் கடன்களுக்கு சலுகைகளை பெற்றுத் தரும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேலும், அக்கடிதத்தில் கல்வி கூட்டுறவு சங்கத்தில் அதிகளவான ஆசிரியர்கள் உட்பட அங்கத்தவர்களின் கோரிக்கைக்கு இணங்க. நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு மாதத்திற்கான கடன் தவணையை செலுத்துவதற்கு நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
இச்சங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொண்ட அங்கத்தவர்களுக்கு நாட்டின் தற்போதைய நிலைமையில் கடனுக்கான மாத தவணையை செலுத்த முடியாத நிலைமை காணப்படுவதனால் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை மாற்றம் அடையும் வரை கடனுக்கான மாதத் தவணையை அறவீடு செய்வதை இடை நிறுத்துவதற்கு சங்கத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி இதன் மூலம் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இச்சங்கத்தில் கடன் பெறுவதற்கு எதிர்பார்த்திருக்கும் அங்கத்தவர்களுக்கு கடன்களை மிக விரைவாக வழங்குவது மிக முக்கியமானதாகும் எனவே இதற்கான பொறிமுறையை ஏற்படுத்தி அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மைந்த ஜெயசிங்க அவர்களின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சங்கத்தின் தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.