ஊரடங்கை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இனி பொலிஸார் சிவில் உடைகளிலும் நிறுத்தப்படவுள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மக்கள் கட்டுப்படாவிட்டால் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டி வரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
ஊரடங்குச் சட்டம் எதற்காக பிறப்பிக்கப்படுகிறது.அது எதற்காகத் தற்காலிகமாக நீக்கப்படுகிறது என்ற விழிப்புணர்வு இன்னும் எமது மக்களுக்கு ஏற்படவில்லை.அவர்கள் ஊரடங்கை மதித்து நடப்பதில்லை.
கொரோனா பரவாமல் இருப்பதற்காக நாம் கூறும் அறிவுரைகளை மக்கள் ஏற்பதாக இல்லை.இருவர் மாத்திரம் ஓட்டோவில் வரவேண்டும் என்று கூறினால் நால்வர் வருகிறார்கள்.பொலிஸாரைக் கண்டதும் இருவர் இறங்கிக்கொள்கிறார்கள்.பொலிஸாரைக் கடந்து சென்று மீண்டும் ஏறிக்கொள்கிறார்கள்.
இப்படி எல்லா உத்தரவையும் மீறியே செயற்படுகிறார்கள்.கொரோனாவில் இருந்து தப்ப வேண்டும் என்பதைவிட பொலிஸாரிடமிருந்து தப்பவே அவர்கள் விரும்புகிறார்கள்.
ஊரடங்கு நீக்கப்பட்டால் எல்லாம் சரி என்று நினைக்கிறார்கள்.மக்களோடு மக்கள் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.அது பிழை.
உணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மாத்திரமே ஊரடங்கைத் தளர்த்துகிறோம்.
பொருட்கள் வாங்குவதற்குத் தனிமையில் செல்ல வேண்டும்.வரிசையில் ஒரு மீற்றர் இடைவெளியில் நிற்க வேண்டும்.ஆனால்,இவை எவற்றையும் மக்கள் பின்பற்றுவதாக இல்லை.
இனிவரும் நாட்களில் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொலிஸார் சிவில் உடைகளில் நிறுத்தப்படுவர்.
மக்கள் கட்டுப்படாவிட்டால் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டி வரும்.-என்றார்.