மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் சடலம் ஒன்று அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருடையது எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாழைச்சேனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதையுடைய தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக நேற்றிரவு சென்றிருந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை வவுணதீவில் உள்ள அரசிஆலைக்கு அருகில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக் கொலை செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு 30ஆம் திகதியும் இரண்டு பொலிஸார் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.