ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி வடக்கு, கிழக்கில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வடக்கு, கிழக்கில் களமிறக்க உத்தேசித்திருப்பதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன ஆகிய மூவரின் வழிகாட்டலில் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது இந்த பயணத்தில் சந்திரிகா குமாரதுங்கவும் இணைந்துகொள்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.