இன்றைய சமூக வலைத்தளங்களில் பேசப்படும் விடயம் சமூக வலைத்தள போராளி ஒருவரது கேள்விகளுக்கு (அதுவும் ஒரு பேக் ஐடிக்கு) சிறையிலிருந்து பிள்ளையான் பதில் அனுப்பியுள்ள விடயமாகும்.
சில வருடங்களாக சமூக வலைத்தளத்தினூடாக புரட்சியை ஏற்படுத்திக்கொண்டு பல சவால்களைத் தாண்டி ஊழல்களை வெளிக்கொண்டு கிழக்கு மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஜெய் ஆன்டனி எனும் முகநூலின் கேள்விக்கே பிள்ளையான் பதில் அனுப்பியுள்ளார்.
சகலரையும் மதித்து எல்லோரது கருத்துக்களையும் உள்வாங்கி, உதாசினப்படுத்தாது பொறுப்புள்ள ஒரு கட்சியின் தலைவனாக பதில் அனுப்பியுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதோ பிள்ளையான் அவர்கள் அனுப்பிய பதில்
ஜெய் அண்டனி அவர்களுக்கு! நான் இன்று சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சந்தித்தேன். உங்களால் முகநூல் வாயிலாக சிறைச்சாலை ,மட்டக்களப்பு என்ற முகவரிக்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு பகிரங்கமாக எழுதிய மடல் சம்பந்தமாக நான் தெரிவித்திருந்தேன்.
அவரிடம் நான் கேட்டேன் உங்களுக்கு ஜெய் ஆண்டனியை பற்றி தெரியுமா என்று முதலில் அவர் என்னிடம் கூறிய விடயங்கள். ஆம் அவருடைய பெயர் ஜெய் அன்ரனி அல்ல அவருடைய வேறு ஒருபெயர் அதை நான் எழுதுவது பொருத்தமில்லை என்று நினைக்கின்றேன் . நீங்கள் யார் என்பது பூரணமாக அவருக்கு தெரியுமாம். அத்தோடு கரடியனாறு பாடசாலை தொடர்பாக நீங்கள் கூறிய விடயங்களுக்குரிய பதில்களை வெளிப்படையாக சில விடயங்களை கூற முடியாதுள்ளது.
கல்வி மாபியா என்பது உண்மைதான் ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தூயநோக்கத்தோடு பணிசெய்யும் நல் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.தேசிய பாடசாலைகள் எனும் போதும். நகரத்தை நோக்கி பிள்ளைகள் செல்லாமல் கிராமத்திலேயே கல்வி கற்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பொதுத் தீர்மானம். மாகாணத்திற்கு அதிகாரம் தேவை அதில் நான் மாறப்போவதில்லை தற்போது மாகாண சபை இல்லாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் காரணம் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய ஆட்சிக் காலத்திற்கு பிற்பாடு கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த தண்டாயுதபாணி அவர்களால் தம்பிலுவில்லில் தேசிய பாடசாலை ஒன்றை ஆரம்பித்து வைத்தார்.
நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் பல மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலையாக ஆக்க கூடிய சூழ்நிலை இருந்தும். நான் அவ்வாறு செய்யவில்லை மாகாணத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று கருத்தியல் ரீதியாக மேடைகளில் பேசிவிட்டு முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கம் எனக்கு இல்லை ஆனால் அண்மைக் காலத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரியை தேசிய பாடசாலை ஆக்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் பகிரங்கமாகவே பல அறிக்கைகளை விட்டார்.
தமிழ் மக்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம் .உரிமை பெற்றுக் கொடுப்போம் சமஸ்ரி பெற்றுக்கொடுப்போம் என்று கூறுபவர்களே முரண்பட்டு, தடம்புரண்டு செல்லும்போது உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களையும் நெறிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதோடு நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் தமிழ் மக்களுக்கு ஏதாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நான் பல முயற்சிகளை செய்து இருக்கின்றேன் அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை அவர் படித்திருப்பார் என்று நான் நினைக்கின்றேன்.
அத்தோடு நான் எனது முயற்சியில் கிழக்கு மாகாணத்திற்கு உரிய ஒற்றுமை, உரிமை, தனித்துவமான விடயங்களிலிருந்து வழி தவறாமல் மாகாணத்தில் அபிவிருத்தியை நோக்கி பயணித்து. எமது மக்களின் வாழ்வாதாரம் ,தொழில்வாய்ப்பு சம்பந்தமான விடயங்களிலும் அக்கறையோடு செயற்படுவேன் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை நான் சந்திக்கும்போது அவர் என்னிடம் இவ்வாறு கூறினார். நன்றி.